search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை"

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நடத்திய விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர். #PollachiCase #CBCID #EnquiryReport
    சென்னை:

    பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து கொடூரங்களை நிகழ்த்தினர்.
     
    இதுதொடர்பாக  சபரிராஜன் (25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவையில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.



    இந்த வழக்கின் விசாரணையில் தெரியவந்த விபரங்களை அறிக்கையாக தயாரித்து, சீலிட்ட உறையிலிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தனர். #PollachiCase #CBCID #EnquiryReport
    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி பார் நாகராஜன் மற்றும் திமுக பிரமுகர் மகன் ஆகியோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. #PollachiAbuseCase #BarNagaraj
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் சமூக வலைத்தளம் மூலம் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை தங்கள் வலையில் வீழ்த்திய ஒரு கும்பல் ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இளம்பெண் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த கொடூர சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்தது.

    இதுகுறித்து திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஏராளமான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மணிவண்ணன்

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த மணி என்ற மணிவண்ணன் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை ஏப்ரல் 8ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், இன்று திமுக பிரமுகர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் 28-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில், 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி பார் நாகராஜுக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.

    புகார் கொடுத்ததற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட  செந்தில், பாபு, வசந்தகுமார், பார் நாகராஜ் ஆகியோர் தற்போது ஜாமீனில் வெளியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #PollachiAbuseCase #BarNagaraj

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து போராடுவேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். #PollachiRapist #SriReddy
    பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வருகிறார்கள்.

    தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டியும் பொள்ளாச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:- “பொள்ளாச்சி சம்பவம் 7 வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன்.



    விரைவில் போலீஸ் அதிகாரிகளையும் அரசியல் வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும்.

    அப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்.” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
    தமிழக மக்களின் உணர்வு எப்படி இருக்கிறதோ, அதோடு நானும் இருக்கிறேன் என்று பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து இளையராஜா கூறியிருக்கிறார். #Ilayaraja
    இசையமைப்பாளர் இளையராஜாவின் 75- வது பிறந்த நாள் நிகழ்ச்சி இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்காக அவர் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நேற்று அவர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    இளையராஜா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாணவிகள் கேட்ட பாடலைப் பாடி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இளையராஜாவிடம் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.



    அதற்கு “தமிழக மக்களின் உணர்வு எப்படி இருக்கிறதோ, அதோடு நானும் இருக்கிறேன். தமிழ் நாட்டு மக்கள் இது போல் இன்னொன்று நடக்கக் கூடாது என்கிறார்கள். அது தான் எனது உணர்வும்“ என்றார்.
    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். #PollachiAbuseCase
    மதுரை:

    மதுரை மேலமாசிவீதி- தெற்கு மாசிவீதி சந்திப்பில் இன்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் சசிகலா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பொன்னுத்தாய், முத்துராணி, மனோகரிதாஸ், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் உள்ளிட்ட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி கோ‌ஷம் எழுப்பினர்.

    பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை பாதுகாக்கும் கோவை போலீசாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து போராடி வரும் மாணவர்கள் மீதான அடக்கு முறையை கைவிட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

    அதேபோன்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் மண்டல ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  #PollachiAbuseCase
    பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். #PollachiAbuseCase #PollachiCase #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் நயவஞ்சக கும்பலால் காதல் ஆசை காட்டி வீழ்த்தப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடூரங்கள் குறித்து வெளியாகி வரும் செய்திகள் மனதை பதைபதைக்க வைக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் அதிகபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள்; எள் முனையளவும் இரக்கம் காட்டப்பட தகுதியற்றவர்கள் ஆவர்.

    இத்தகைய கொடூரங்களுக்கு சம்பந்தப்பட்ட மனித மிருகங்களையும், பாதிக்கப்பட்ட பெண்களின் ஏமாளித்தனத்தையும் மட்டும் காரணம் காட்டிவிட்டு, நாம் கடந்து போய்விட முடியாது. பொள்ளாச்சி கொடூரத்துக்கு சமுதாயமும் பொறுப்பேற்க தான் வேண்டும். ஏனெனில் நம்மை சுற்றியுள்ள நல்ல விஷயங்கள் குறித்தும், கெட்ட விஷயங்கள் குறித்தும் நமது அடுத்த தலைமுறையினருக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் தவறியிருக்கிறோம். இது சமூகத்தின் தவறு.

    ஆண் குழந்தைகளாக இருந்தாலும், பெண் குழந்தைகளாக இருந்தாலும் அவர்களுடன் நேரத்தை செலவிடாமல் பணிக்காகவும், பொருளுக்காகவும் ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர் சித்திரங்களை வாங்க கண்களை விற்பவர்களாக தான் இருக்க முடியும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் அவற்றுக்கு சென்று திரும்பும் வழியில் நடக்கும் நிகழ்வுகளாக இருந்தாலும், எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக இருந்தாலும் அதை தயக்கமின்றி குடும்பத்தினரிடம் கூறலாம்; அவர்கள் தீர்வு கூறுவர் என்று பெண் பிள்ளைகள் நம்பும் ஆரோக்கியமான சூழல் ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

    பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் குழந்தைகளின் மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பது செல்போன்கள் ஆகும். அனைத்து தீமைகள் மற்றும் சீரழிவுகளுக்கு நுழைவாயிலாக அமைவது செல்போன்கள் தான். எனவே, அழிவின் ஆயுதமான செல்போன்கள் தேவையில்லாமல் குழந்தைகளின் கைகளில் கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; அதை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். இதை உங்கள் குடும்ப மூத்த உறுப்பினரின் அறிவுரையாக கருதி அனைவரும் பின்பற்ற வேண்டும்.



    பெண் குழந்தைகள் அவர்களின் பதின்வயதில் எந்த மனச்சிதறல்களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. படிக்கும் வயதில் உயர்கல்வியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் தான் அவர்களின் இலக்காக இருக்க வேண்டும். அறிமுகமற்றவர்களின் அன்பைக்கூட சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்க வேண்டும். காதல் நாடகமாடி வாழ்க்கையை சீரழிக்க முயலும் வஞ்சகர்களிடம் விழிப்புடன் விலகியிருக்க வேண்டும்.

    பெண் குழந்தைகளுக்கு கட்டுப்பாட்டை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறும் பெற்றோர், ஆண் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பெண்களை சகோதரிகளாக நினைத்து மதிக்கும் மாண்பை ஆண் குழந்தைகளிடம் பெற்றோர் விதைக்க வேண்டும்.

    அதற்கெல்லாம் மேலாக, பெண்களை மயக்கும் கயமை போக்கை கைவிட்டு, மதிக்கும் போக்கை நமது இளைஞர்களுக்கு கற்பிக்க சமுதாயத்தின் அனைத்து அங்கத்தினர்களும் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PollachiAbuseCase #PollachiCase #Ramadoss
    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் என்னை சிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது என்று அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட நாகராஜ் கூறினார். #Pollachicase #ADMK #Nagaraj
    கோவை:

    பொள்ளாச்சியில் ஆபாச படம் எடுத்து பாலியல் மிரட்டல் விடுப்பதாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பைனான்சியர் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் புகார் அளித்த கல்லூரி மாணவியின் அண்ணனை மிரட்டியதாக பொள்ளாச்சி அ.தி.மு.க. பிரமுகரான பார் நாகராஜ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைதொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவர் நடத்தி வந்ததாக கூறப்பட்ட டாஸ்மாக் மது பாரும் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது.நாகராஜுக்கு பாலியல் வழக்கிலும் தொடர்பு இருப்பதால் அவரை கைது செய்ய கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் நாகராஜ் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    பொள்ளாச்சியில் நடந்துகொண்டிருக்கும் ஆபாச வீடியோ வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது அரசியல் வாழ்விலும், பொதுவாழ்விலும் என்னை பிடிக்காத சிலர் சமூகவலைத்தளம் மற்றும் ஊடகங்கள் மூலமாக இந்த வழக்கில் என்னையும் சம்பந்தப்படுத்தி தவறான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    வேறு யாரோ உள்ள ஆபாச வீடியோவை காட்டி நான் அதில் இருப்பதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. என்மீது தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள். இதனை தடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் பொள்ளாச்சி நகர பாசறை துணைச்செயலாளராக முன்பு இருந்தேன். இப்போது அந்த பதவியில் இல்லை. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் மது பார் நடத்தி வந்தேன். இப்போது நான் பார் நடத்தவில்லை. சேதப்படுத்தப்பட்டது எனது பார் இல்லை.

    இந்த வழக்கில் கைதான 4 பேர் எனக்கு தெரியும். ஆனால் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியாது. பாலியல் வன்முறை சம்பவத்தில் எனக்கு தொடர்பு இல்லை. என்னை இந்த வழக்கில் சிக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Pollachicase #ADMK #Nagaraj
    பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களின் படத்தை துடைப்பத்தால் அடித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். #Pollachicase
    திருச்சி:

    பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்களின் படத்தை துடைப்பத்தால் அடித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் போராட்டத்தால் பொள்ளாச்சியில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் முகநூல் (பேஸ்புக்) மூலம் நட்பாக பழகி, பின்னர் அவர்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக வீடியோ எடுத்த சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன. அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று காலை 11 மணிக்கு, திருச்சி மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பினர் நூதன போராட்டம் நடத்தினார்கள்.

    போராட்டத்தின்போது மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக பறை அடித்து பாட்டு பாடினார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்தாலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்காது. எனவே, அவர்களை மக்கள் முன்னிலையில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.

    ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிளக்ஸ் பேனரில் உள்ள கைதானவர்கள் 4 பேரின் உருவப்படத்தின்மீது துடைப்பத்தாலும், செருப்பாலும் மாறி, மாறி அடித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நெய்வேலி புதுநகர் 14-வது வட்டத்தில் உள்ள ஜவகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வழக்கம்போல் நேற்று காலை மாணவ-மாணவிகள் வந்தனர். ஆனால் அவர்கள் வகுப்பறைக்கு செல்லாமல், நுழைவு வாயில் முன்பு ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பின்னர் கல்லூரியில் இருந்து மாணவ-மாணவிகள், பேரணியாக சூப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.



    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் துறை மாணவ-மாணவிகள் நேற்று காலை 10.45 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்து பொறியியல் துறை கல்லூரி வளாகம் முன்பு ஒன்று திரண்டு தரையில் அமர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் கைதானவர்களை தூக்கிலிட வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் அண்ணாமலைநகர் போலீசார் விரைந்து வந்து, மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவ-மாணவிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கிள்ளை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவ- மாணவிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பொள்ளாச்சி நகரம் போராட்ட களமாக மாறியது. நேற்று பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியது.

    இதையடுத்து பொள்ளாச்சியில் உள்ள குறிப்பிட்ட சில கல்லூரிகளுக்கு நேற்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. போராட்டம் நடைபெற்ற நகராட்சி அலுவலகம் எதிரே தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 350 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    வால்பாறையில் பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலை தர்ணா போராட்டம் நடத்தினர்.



    தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன்பு மாணவிகள் அமர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை ரெயிலடியில் பல்வேறு தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். தஞ்சை கோர்ட்டு முன்பு சாலையின் குறுக்கே நின்று தஞ்சை வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேலூர் ஊரீசு கல்லூரி மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவிகள் போராட்டம் நடந்த அதேவேளையில் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பணிபுரியும் பெண் வக்கீல்கள் அனைவரும் வெளியே வந்து தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Pollachicase
    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை குழுவை ஐகோர்ட்டு அமைக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். #Vaiko #PollachiAbuseCase #PollachiCase
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, எந்த மொழியும் பிறமொழி மீது திணிக்கப்படமாட்டாது என்றதுடன், தமிழர் பண்பாடு, வரலாறு, உணர்வுகள் அனைத்தையும் போற்றி பேசினார்.

    பொள்ளாச்சி பாலியல் சம்பவம் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வந்து உள்ளது. 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்வு அழிந்து உள்ளது. ஓர் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 10 பெண்களுக்கு மேல் தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற தகவல் வேதனை தருகிறது. பாலியல் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர், தகவல்கள் வெளியே வரக்கூடாது. பெண்ணின் கவுரவம் காப்பாற்றப்பட வேண்டும். இல்லை என்றால் அவர்கள் சமூகத்தில் வாழ முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை போலீஸ் சூப்பிரண்டு கூறியது மன்னிக்க முடியாத செயலாகும்.



    இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த வழக்கை ஐகோர்ட்டு தாமே முன் வந்து எடுத்துக்கொண்டு, இதுபற்றி விசாரிக்க தகுதியான நபர்களை கொண்ட சுதந்திரமான விசாரணை குழுவை அமைக்க பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #PollachiAbuseCase #PollachiCase
    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தெரிவிக்கலாம் என்றும், புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கோவை அவினாசி ரோட்டில் செயல்படும் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பான வீடியோ ஆதாரங்களோ, புகைப்படங்களோ வைத்திருப்பவர்களும் கோவை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் சென்று கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் அல்லது புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் கொடுப்பவர்களின் பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

    இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையோ, வீடியோ ஆதாரங்களையோ சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ அல்லது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாலோ 94884 42993 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம். cb-c-i-d-c-b-e-c-ity@gm-a-il.com என்ற இணையதள முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    ×